internet

img

கணினிக்கதிர் : உங்கள் வேலையை எளிதாக்கும் இலவச மென்பொருள்கள்

வேர்ட், எக்செல் போன்ற டாக்குமெண்ட் கோப்புகள் மற்றும் இமேஜ் ஃபைல்களை எளிதாக PDF வடிவத்திற்கு மாற்ற பல மென்பொருள்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான மென்பொருள்கள் கட்டண அடிப்படையில்தான் மேம்பட்ட வசதிகளைத் தருகின்றன. இலவசப் பயன்பாட்டில் குறைவான வசதிகளையே தருகின்றன. இதுபோன்ற மென்பொருள்களுக்கு மாற்றாக அடோப் பிடிஎப் எடிட்டர். போன்ற உயர் ரக பிடிஎப் மென்பொருள்கள் தரும் எண்ணற்ற வசதிகளை இலவசமாகத் தரும் ஒரு சில மென்பொருள்கள் வந்துள்ளன. அந்த வகையில் இரண்டு மென்பொருள்களைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

கிளவ் பிடிஎப் (Claw PDF)
நாம் அதிகம் பயன்படுத்தும் டூ பிடிஎப், அடோப் பிடிஎப், புல்ஜிப் பிடிஎப் போன்ற மென்பொருள்களைப் போன்றே இதுவும் பிரிண்ட் டூ பிடிஎப் முறையில் கோப்புகளை மாற்றித் தருகிறது. பிரிண்ட் செய்வது போல PDF, PDF/A, PDF/X, PNG, JPEG, TIF மற்றும் டெக்ஸ்ட் வடிவக் கோப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். இம்மென்பொருள் முற்றிலும் ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. கோப்பிற்கு இடையில் வேறு பிடிஎப் அல்லது இமேஜ் பக்கங்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம், பேக்கிரவுண்ட் வண்ணங்கள் சேர்க்கலாம், கோப்பின் மீது வாட்டர்மார்க் சேர்க்கலாம் எனப் பல வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. விண்டோஸ் 7, 8, 10 இயங்குதளங்களில் 32 பிட் மற்றும் 64 பிட்களில் இயங்கக் கூடியது. இம்மென்பொருளைப் பதிவிறக்கம் செய்ய: https://github.com/clawsoftware/clawPDF

பிடிஎப் 24 (PDF 24)
இம்மென்பொருளும் இலவசம்தான். இதிலும் பிடிஎப் டூ பிரிண்ட் வசதி உள்ளது. அத்துடன் கோப்புகளை இணைக்கும் வசதி, பிரிக்கும் வசதி, பிடிஎப் அளவை சுருக்கும் கம்ப்ரசன் வசதி, பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாக்கும் வசதி, PDF/A, PDF/X, PS, EPS, PCL, PNG, JPEG, BMP, PCX, TIFF, PSD போன்ற கோப்பு வடிவங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, வாட்டர்மார்க் மற்றும் ஸ்டாம்ப் வசதி, கணினித்திரையைப் படம் பிடிக்கும் ஸ்கிரீன் ஷாட் பயன்படுத்தி விருப்பமான அளவுகளைத் தேர்வு செய்து பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளும் வசதி ஆகியவற்றுடன் பிடிஎப் கோப்புகளை பார்க்கும் ரீடர் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இம்மென்பொருளைப் பதிவிறக்கி பயன்படுத்தாமல் ஆன்லைன் மூலம் பயன்படுத்தும் வசதியையும் இந்த இணையதளம் வழங்குகிறது.இம்மென்பொருளைப் பதிவிறக்கம் செய்ய :https://en.pdf24.org/\

பட அளவை எளிதாகக் குறைக்கலாம்
டாக்குமெண்ட்கள், போட்டோக்களை இணையதளங்களில் அப்லோட் செய்யும்போது 100 KB அல்லது 50 KB அளவு படங்களை பதிவேற்றவும் என்று கேட்கும். அப்போது நம்மிடம் இருக்கும் 2MB, 5MB, 10MB அளவுள்ள ஸ்கேன் செய்யப்பட்ட அல்லது டிஜிட்டல் கோப்புகளின் அளவைக் குறைக்க மிகவும் சிரமப்படுவோம். போட்டோஷாப், பெயிண்ட் போன்ற மென்பொருள்களைக் கொண்டு குறைக்கும்போது தெளிவற்ற படங்களாகவும், அளவு குறைந்து சிதைந்த தோற்றத்துடனும் படங்களை உருவாக்குவோம். இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக http://jpeg-optimizer.com/ என்ற இணையதளம் உதவுகிறது. இத்தளத்தில் நாம் அளவு குறைக்கவேண்டிய படத்தை அப்லோட் செய்து கம்ப்ரசன் அளவு தேவைப்படும் பிக்சல் அளவைக் கொடுத்தால் படத்தின் அளவைக் குறைத்துக் கொடுக்கிறது. உங்கள் தேவைக்கேற்ற அளவு கிடைக்கும்வரை கம்ப்ரசன் அளவு மற்றும் பிக்சல் அளவைக் குறைத்தோ கூட்டியோ முயற்சி செய்யலாம். இந்த இணையதளம் போலவே https://compressjpeg.com/ என்ற இணையதளத்திலும் பட அளவைக் குறைக்கலாம். 

பட அளவைக் குறைக்க கணினி மென்பொருளாகவும், ஆன்லைன் இணையதளமாகவும் கிடைக்கும் ஓப்பன் சோர்ஸ் இலவச மென்பொருள் ஒன்று https://saerasoft.com/caesium/ என்ற தளத்தில் உள்ளது. விண்டோஸ் கணினிக்கான இன்ஸ்டாலர் மற்றும் போர்ட்டபிள் வடிவ மென்பொருள்களைப் பதிவிறக்க https://www.fosshub.com/Caesium-Image-Compressor.html என்ற தளத்திலும், ஆன்லைன் மூலம் பயன்படுத்த https://caesium.app/ என்ற தளத்திற்கும் செல்லவேண்டும்.

===என்.ராஜேந்திரன்===

 

;